ப்ளைதுபாய் விமானத்தில் ஓமன் விமானியால் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறி, மயக்க நிலையில் இருந்த இந்திய விமானியின் உயிரை காப்பாற்ற தொடர்ந்து 45 நிமிடம் போராடியதாக இஸ்ரேல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து செப்டம்பர் 30 அன்று இஸ்ரேல் நோக்கி சென்ற ப்ளைதுபாய் விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமியால், இந்திய விமானி ஸ்மித் மச்சார் விமானி அறையில் இருந்த கோடரியால் தாக்கப்பட்டார்.
இதையடுத்து விமானி அறையை திறந்துவிட்டு கீழே விழுந்த மச்சாருக்கு, இஸ்ரேலில் வசிக்கும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த பல் மருத்துவரான ஷூடா மூசாயேவ் மருத்துவ முதலுதவியை அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து பல் மருத்துவர் ஷூடா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த சூழ்நிலையை விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும், நான் எப்படி சமாளிக்க முடியும் என யோசித்தேன்; நான் எப்படி உதவ முடியும் என்றும் யோசித்தேன்.
தரையில் கிடந்த இந்திய விமானியின் தலையில் இருந்தும், இடது கையில் இருந்தும் அதிகளவில் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. முதலில் அழுத்தம் கொடுப்பதற்காக டி-ஷர்ட்டை பயன்படுத்தினேன்.
ஆனால் ரத்தம் வடிவது நிற்கவில்லை; உடனே நான் பாதுகாவலர்களிடம் ஐஸ் கட்டிகள் கேட்டேன். இந்திய விமானிக்கு ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன.
அதனால் நிறைய ஐஸ் பாக்கெட்டுகள் எனக்கு தேவைப்பட்டன. ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக தொடர்ந்து 45 நிமிடம் சிறிய அளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
இந்திய விமானி மயங்கிய நிலைக்கு சென்றபோது, அவர் சுய நினைவுடன் இருப்பதற்காக தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நான் அவரிடம், தயவுசெய்து தூங்காதீர்கள், நீங்கள் எங்களுக்கு தேவை என்று சொன்னேன். மேலும் அவர் சுயநினைவுடன் இருப்பதற்காக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள், அவர்களின் பெயர் என்னவென்று பேச்சு கொடுத்தேன்.
இந்திய விமானியிடம், பயப்படாதீர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்திடம் திரும்பிச் செல்வீர்கள், விரைவில் விமானம் தரையிறங்கிவிடும் என்று கூறினேன்.
இந்திய விமானிக்கு வலி அதிகளவில் இருந்ததால், அவர் என்னிடம் வலி நிவாரணி மாத்திரையை கேட்டார். ஆனால் ரத்தம் அதிகளவில் வெளியேறி கொண்டிருந்ததால், நான் அவருக்கு குடிப்பதற்கு சிறிதளவு தண்ணீர் மட்டுமே கொடுத்தேன்.
ஒருகட்டத்தில் விமானியின் நிலை மோசமடைந்ததால், அவரது நாடித்துடிப்பை மீட்டெடுக்க கால்களை மேலே தூக்கினேன். பின்னர் நாடித்துடிப்பு மீண்டும் வந்தது.
இதையடுத்து அவரின் உதடுகள் நீல நிறமாக மாறியதை கண்டபோது, நான் விமான பணியாளரிடம் விமானத்தை விரைவாக தரையிறக்க வேண்டும், அவருக்கு அதிக நேரமில்லை என்று கூறினேன்.
சவுதி அரேபியாவில் விமானம் தரை இறங்கியதும், சகோதரரே வாழ்த்துகள், எல்லாம் சரியாகிவிடும் என்று மச்சாரிடம் கூறினேன்.
மேலும் இந்திய விமானி எங்கள் உயிரை காப்பாற்றினார், அவர் ஒரு நாயகன். என் குடும்பத்தையும் அனைத்து பயணிகளையும் காப்பாற்ற அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று மருத்துவர் கூறினார்.