வான்வழித் தாக்குதலில் மறிப்பதை விட இஸ்ரேல் சிறைகள் பாலாஸ்தீனியர்கள் கொடுங்கனவாக மாறியுள்ளது.
இஸ்ரேல் தடுப்பு காவலில் நடக்கும் சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள் குறித்து ஐநா அண்மையில் எச்சரித்திருந்தது.
இந்த சூழலில் இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீனர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளின் நேரடி சாட்சியாக பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் சிறையில் அடைபடுவதற்கு முன்பும் விடுவிக்கப்பட்ட பின்பும் இருக்கும் புகைப்படங்களின் ஒப்பீடு உலகையே உலுக்கி உள்ளது.
பலஸ்தீன கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ள இரு புகைப்படங்களில், ஒன்றில் கைது செய்யப்படுவதற்கு முன்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த முப்லிஹ், மற்றொன்றில், அதாவது விடுதலைக்குப் பிறகு அடையாளம் காண முடியாத அளவிற்கு மிக மோசமான உடல்நலக் குறைபாட்டுடன், மண்டையோட்டின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார்.
பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் கடந்த 2025 ஜூன் மாதம், எவ்வித விசாரணையுமின்றி இஸ்ரேலின் நிர்வாகக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வெவ்வேறு இஸ்ரேலிய சிறைகளுக்கு மாற்றப்பட்டு அங்கு பல சித்திரவதைகளை அனுபவித்தார்.
மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 2026 ஜனவரியில் இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால், சிறையில் இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சித்திரவதைகளாலும், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் விடுதலையான இரண்டே நாட்களில் இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
எனவே இவருக்கு அடுத்தடுத்து பல அவசர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதன் ஒரு பகுதியாக இவரது மண்டையோட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
தற்போது இவர் படுத்த படுக்கையாக, தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
கடந்த ஜனவரியில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தான் அனுபவித்த நரக வேதனைகளை கண்ணீருடன் விவரித்த முப்லிஹ்,
"இஸ்ரேல் சிறைகளில் ஒரு துண்டு ரொட்டி என்பது எப்படி ஒரு எட்டாக்கனவாக மாறும் என்பதையும், வானத்திலிருந்து விழும் ஒரு சொட்டு குளிர்ந்த நீர் எப்படி இறைவனின் மிகப்பெரிய ஆசிர்வாதமாகத் தோன்றும் என்பதையும் நான் அங்கு உணர்ந்தேன். பசியின் உண்மையான கொடூரத்தை அங்குள்ள தனிமைச் சிறைகள் எனக்குக் கற்றுக்கொடுத்தன.
மனித வாழ்வின் மிக அடிப்படையான தேவைகள் கூட மறுக்கப்பட்டு, சிறை அதிகாரிகளின் முழுக் கட்டுப்பாட்டில் வாழ்ந்தபோது, அவமானத்தின் உச்சத்தை நான் கண்டேன்.
பயம், கவலை, சித்திரவதை நிறைந்த அந்த நீண்ட இரவுகளின் கொடுமை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது." என குறிப்பிட்டார்.
தன் கண் முன்னாலேயே தன்னுடன் இருந்த இரண்டு பாலஸ்தீன கைதிகள் சித்திரவதையால் துடிதுடித்து மரணமடைந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் முப்லிஹ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பட்டினி, உடல் மற்றும் மன ரீதியான அத்துமீறல்கள், மருத்துவ சிகிச்சை புறக்கணிப்பு ஆகியவற்றை தினசரி எதிர்கொண்டு வருகின்றனர்.
பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகும், மீண்டும் தங்களைக் கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர்.
கடந்த 2023 அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 245 பாலஸ்தீன பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
காசாவில் நடக்கும் உண்மைகளை உலகம் அறிந்துகொள்வதைத் தடுப்பதற்காக, சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தி வரும் இந்த ஒடுக்குமுறைக்கு மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.