உலகம்

போருக்கு மத்தியஸ்தம் பாகிஸ்தானா?.. ஈரான் மறுப்பு

பாகிஸ்தான் வெளியிட்ட அந்த அறிவிப்பு முழுக்க முழுக்க அவர்களது சொந்தத் திட்டம்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்வதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்கா - ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் முன்மொழிந்திருந்தார்.

ஆனால், ஈரான் அதை தற்போது நிராகரித்துள்ளது.

மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் இது குறித்து நேற்று (மார்ச் 30) அளித்த விளக்கத்தில், "பாகிஸ்தான் முன்னெடுத்துள்ள இந்தச் சமாதான முயற்சியில் ஈரானுக்கு எவ்விதப் பங்களிப்பும் இல்லை.

பாகிஸ்தான் வெளியிட்ட அந்த அறிவிப்பு முழுக்க முழுக்க அவர்களது சொந்தத் திட்டம்.

அமெரிக்காவின் தூதரகக் கொள்கைகள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவை என்றும், அவர்கள் பேச்சைக் காப்பாற்ற மாட்டார்கள்.

போர் முடிவுக்கு வருவதை வரவேற்பதாகவும், ஆனால் இந்தப் போரைத் தொடங்கியது யார் என்பதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று ஈரான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடைய ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தலைமையில், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சூடு வெடித்ததைத் தொடர்ந்து, கூட்டம் அவசரமாக ரத்து செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.