நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு 
உலகம்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட சீனா காரணமா? - அதிர்ச்சி பின்னணி

பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பனிச்சரிவு

இமயமலையில் திபெத் சீன எல்லையில் உற்பத்தியாகும் கைரோங் நகருக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு தான் இந்த வெள்ளபெருக்குக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

போதே கோஷி நதியில் பனிப்பாறைகள் விழுந்து ஏற்பட்ட அடைப்பினால் அதிகளவில் நீர் அடைபட்டு அணை உடைந்து இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பனிப்பாறைகள் திபெத்தில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் நடந்ததாக கணிக்கப்பட்டது. ஆனால் இமயமலையில் வெப்பமயமாததால் ஏற்பட்ட விளைவினால் பனிப்பாறைகள் பிடிப்பை இழந்து விழுந்ததாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

சீனா காரணமா?

இந்த சூழலில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இமயமலைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளே காரணம் என்ற கண்ணோட்டத்தையும் சிலர் முன்வைத்துள்ளனர்.

நேபாள புலனாய்வு பத்திரிகை குழுவான 'நேபாள் கரஸ்பாண்டன்ஸ்', இந்த கட்டுமானங்களால் தான் பனிச்சரிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

சீனப் பகுதியில் உள்ள இமயமலையில் உயரமான பனிப்பாறைகள் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமானங்கள் மூலம் புதிய நகரை சீனா அமைத்து வருகிறது.

புதிய நகரம்

அங்கு மலைகளை குடைந்து புதிய நகரத்தை சீனா அமைத்து வருகிறது. சுரங்கப் பணிகள், மலைகளைக் குடைந்து சாலைகள் மற்றும் திரிசூலி நதியின் இயல்புப் போக்கை மாற்றி அமைக்கும் வண்ணம் அதன் மீது பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது அப்பகுதியின் மென்மையான இமயமலை சூழலியலை தீவிரமாகப் பாதித்துள்ளன.

குறிப்பாக நேபாளத்தின் ரசுவா எல்லையில் சீனாவால் அமைக்கப்பட்ட கைரோங் துறைமுகம் 2 நதிகள் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நேபாள எல்லையை நோக்கிப் பாயும் நதி நீரின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது.

எச்சரிக்கை இல்லை

கட்டுமானங்களால் ஏற்பட்ட நிலப்பரப்பு மாற்றங்களே பனிச்சரிவுக்கு வித்திட்டுள்ளது என்றும் இவ்வளவு பெரிய அளவிலான பேரிடர் மற்றும் அணை உடைப்பு அபாயம் குறித்து சீன தரப்பிற்கு தெரிந்திருந்தும், நேபாளத்திற்கு உரிய நேரத்தில் முன் எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக பத்திரிகை குழு சாடியுள்ளது.

இப்படி, எல்லைக்கு அப்பால் சீன பகுதியில் நடக்கும் திட்டமிடப்படாத கட்டுமானங்களால், ஆற்றின் கீழ்நோக்கிய பகுதியில் அமைந்துள்ள நேபாளம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களுக்கு இலக்காகி வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை பொய் என மறுத்துள்ள சீன அரசு, இது இயற்கையாக ஏற்பட்டது என்றும் இந்த வெள்ளத்தால் சீனப் பகுதியிலும் உயிர்ச்சேதமும் உள்கட்டமைப்பு சேதமும் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.