இஸ்லாமிய குடியரசில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுதல் மற்றும் அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய, அமெரிக்கா உடனான ஒரு வரைவு கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு மாதத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைபோருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதாக ஈரான் கூறியது.
ஈரானிய அரசு தொலைக்காட்சி, சாத்தியமான ஒரு "புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்" வரைவு என்று தாங்கள் கருதுவதை மேற்கோள் காட்டியது. இருப்பினும், அந்த உரை இன்னும் "இறுதிப்படுத்தப்படவில்லை" என்றும் அது தெளிவுபடுத்தியது.
"ஈரானின் கடற்படை முற்றுகையை நீக்குவதற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைத் துன்புறுத்துவதை நிறுத்துவதற்கும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது," என அந்நாட்டு தொலைக்காட்சி அறிக்கை தெரிவித்தது.
அந்த வரைவின்படி, இதற்கு பதிலாக, முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரான் ஒப்புக்கொள்ளும், ஆனால் அதுவே கப்பல் போக்குவரத்து பாதைகளை தொடர்ந்து நிர்வகிப்பது, கப்பல்களை ஆய்வு செய்வது மற்றும் கப்பல்களுக்கு சேவை கட்டணங்களை விதிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
அந்த வரைவில், நீரிணை "நிபந்தனையின்றி" மீண்டும் திறக்கப்படாது என்றும், அதன் நிபந்தனைகள் இராணுவக் கப்பல்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.