அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அலி கமேனியுடன் சேர்த்து அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா ஆகிய அனைவரும் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து போர் வெடித்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களின் இறுதிச்சடங்கு கடந்த 4 மாதங்களாக நடைபெறவில்லை. குளிரூட்டப்பட்ட ரகசிய அறையில் அவர்கள் உடல்கள் பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது போர்ப் பதற்றங்கள் சற்றுத் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள சூழலில் இறுதிச்சடங்குகள் முறைப்படி நடக்கிறது.
தலைநகர் தெஹ்ரானில் நேற்று இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. வரும் நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு அவர்களது உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 9 அன்று மஷ்ஹாரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. தெஹ்ரான் இமாம் கமேனி கிராண்ட் மொசல்லா வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளின் முன்னிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தரத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் அஞ்சலி செலுத்தினர். அப்போது முகமது பாகர் மற்றும் அப்பாஸ் அராக்சி ஆகியோர் துக்கத்தை தாக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதனர். மேலும் அஞ்சலி செலுத்த வந்த பெரும்பாலானோர் அழுததால், அந்த இடம் சோகமாக காட்சி அளித்தது.
லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வர இருப்பதால், உயர்மட்ட பாதுகாப்பை ஏற்பாடுகளை செய்வோம் என தெஹ்ரான் கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிட்டபடி மக்கள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய தலைவர்கள் அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள் என்று ஈரானுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முஃப்தி, காங்கிரஸ் தலைவர் சல்மான குர்ஷித் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்கிறார்.