அமெரிக்காவுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், பெண்களுக்கென பிரத்யேக ராணுவ பயிற்சி முகாமை ஈரான் ராணுவம் தொடங்கியுள்ளது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் இடையூறு ஏற்பட்டு, அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் விரைவில் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக பெண்களை தயார்படுத்தும் நோக்கில், ஈரான் ராணுவம் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன்படி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில், ‘ஜன்ஃபதா’ என்ற ராணுவ முன்னெடுப்பை இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது.
ஈரானுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் 'ஜன்ஃபதாயன்' என அறியப்படுகிறார்கள்.
மேலும் ஜன்ஃபதா என்பது பெண் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சிகள், சுவர் ஏறுதல், கம்பி வழிப்பயணம், துப்பாக்கி தாக்குதல்கள், இயந்திர துப்பாக்கிகள், மோட்டார்களை கையாளுதல் ஆகியவற்றை கற்றுத்தரும் ராணுவ பயிற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியை பசீஜ் துணை ராணுவ அமைப்புடன் இணைந்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை நேற்று தொடங்கியுள்ளது.