அமெரிக்க ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து, இருநாட்டுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இந்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் தொடர்ந்து மீறப்படுவதாக ஈரான் நாடளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவில் நடக்கும் சம்பவங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகவும், அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “இந்த இரவுகளில் பாரசீக வளைகுடாவில் நடக்கும் நிகழ்வுகளை, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான புரிந்துணர்வின் மீறலாகவே நாங்கள் பார்க்கிறோம்.
தற்போதைய பேச்சுவார்த்தைகள் மூலம் தாக்குதலை பற்றி விவாதிப்பதை விட, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இருந்தபோதிலும் நாங்கள் நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுப்போம்.
இந்த வகையான மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு ஈரான் நிச்சயமாக பதிலடி தரும்.
அமெரிக்காவுடன் ஏற்கனவே 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து ஹார்மூஸ் நீரிணையில் அமலில் இருந்த கடற்படை முற்றுகை நீக்கப்பட்டது.
மிகக் கடுமையான போர் வகை என்பது கடற்படை முற்றுகையாகும். இதன்மூலம் மக்களும் அவர்களின் வாழ்வாதாரமும் முற்றுகையிடப்பட்டு இருந்தன. இந்தவகையான முற்றுகை தற்பொழுது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.