அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 40 நாட்கள் நீடித்த நிலையில் கடந்த 7-ந்தேதி 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதில் இரு நாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் ஆகியவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இதில் ஈரான் தொடர்புடைய கப்பல்கள் தடுக்கப்பட்டன. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்த நிலையில் அதை ஒரே நாளில் திரும்ப பெற்று அந்த ஜலசந்தியை மீண்டும் மூடியது. இதற்கிடையே ஈரான் கப்பலை அமெரிக்க கடற்படை பறிமுதல் செய்தது.
இரு நாடுகள் இடையே மோதல் போக்கு நீடித்த போதிலும் இந்த வாரம் பாகிஸ்தானில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தானுக்கு இன்று புறப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களின் கீழ் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் முற்றுகையிட்டு போர் நிறுத்தத்தை மீறுவதன் மூலம், இந்தப் பேச்சுவார்த்தை மேசையைத் தனது சொந்த கற்பனையில் சரணடைவதற்கான மேசையாக மாற்ற அல்லது மீண்டும் போரைத் தூண்டு வதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம். போர்க்களத்தில் புதிய அஸ்திரங்களை வெளிப்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.
ஈரானின் சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவுக்கு ஈரான் வந்துள்ளதாக கூறப்படுகிறது. போர்நிறுத்தக் காலம் முடிந்த பிறகு ஈரானின் பெரும்பாலான இடங்களில் குண்டுகள் வெடிக்க தொடங்கும் என்றும் நாளை மாலைக்குள் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்நாடு மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் நிபந்தனைகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஈரான் கப்பலை விடுவிக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. இந்த போர் நிறுத்தத்தை நீட்டிக்க மாட்டேன் என்று டிரம்ப் கூறி உள்ள நிலையில், 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஏற்கனவே அமெரிக்கா-ஈரான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்த நிலையில் ஈரான் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால் பேச்சுவார்த்தையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தற்காலிக போர் நிறுத்த காலத்திற்குள் இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் போர் மீண்டும் தொடங்கிவிடுமோ என்று அச்சம் இருந்து வருகிறது.