உலகம்

சேதமடைந்த அணு உலைகளை சீரமைக்க ஈரான் தீவிரம் காட்டவில்லை- சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு ஈரானில் அணு உலைகளைச் சரிசெய்யும் பணிகள் எங்குமே நடைபெறவில்லை.

‘கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை’ என்று சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், ஈரானின் தற்போதைய அணுசக்தி நிலைப்பாடு குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த விதிகளை முழுமையாகப் பின்பற்றத் தவறியதும், தங்களது அணுசக்தி மையங்களைச் பார்வையிட ஆய்வாளர்களை அனுமதிக்க மறுத்ததும் ஈரான் மீதான புகார்களுக்கு முக்கியக் காரணமாகும். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு ஈரானில் அணு உலைகளைச் சரிசெய்யும் பணிகள் எங்குமே நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய ரஃபேல் க்ரோஸி, அணுசக்தி மையங்களை நேரில் சென்று பார்வையிட ஐஏஇஏ ஆய்வாளர்களுக்கு ஈரான் அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தலை ஏற்படுத்தும் யுரேனியம் இருப்பு

ஈரானிடம் தற்போது சுமார் 440.9 கிலோ எடையில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாகவும், இது ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான 90 சதவீத செறிவூட்டலுக்கு மிக அருகில் இருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி இருப்பின் தற்போதைய முழுமையான நிலவரத்தை தங்களால் துல்லியமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடரும் மோதல் போக்கு

இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரானின் துணைத் தூதர் கொலாம்ஹூசைன் தர்ஸி, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் வான்வழித் தாக்குதல்களைக் கடுமையான போர்க்குற்றம் எனச் சாடினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், ஈரான் தனது சர்வதேச அணுசக்தி கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டு பொய்களைப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார். இதனால் சர்வதேச அரங்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான கருத்து மோதலும் பதற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT