பெரும்பான்மையை பெறத் தவறிய நேதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் அரபு கட்சிகள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு

கையூட்டு, மிரட்டல், வன்முறை, பித்தலாட்டம் மற்றும் வாக்காளர்களை திரட்டும் சட்டவிரோத மென்பொருள் ஆகியவற்றை பயன்படுத்தி யூத நாட்டை அழிக்க முயலும் அரபு கட்சிகளால் திருடப்பட்டுள்ளது
நேதன்யாகு, ஐசன்கோட்
Published on: 
Summary

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலை அரபு கட்சிகள் திருடிவிட்டதாக பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இஸ்ரேலில் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அன்றைய தினம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 93 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஆளும் நேதன்யாகுவின் லிகுத் கட்சி கூட்டணிக்கோ, எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாசர் கட்சியின் கூட்டணிக்கோ ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெரும்பான்மை இல்லை

இதனால் நேதன்யாகுவின் அணி முன்னிலை வகித்தபோதும் ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெற முடியவில்லை.

121 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசட்டில்) 61 இடங்களை கைப்பற்றினால் ஆட்சி அமைக்கலாம்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி நேதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன.

அரபு கட்சிகள்

அரபு கட்சிகள் மொத்தம் 16 இடங்களை வென்றுள்ளன. இஸ்ரேலில் மக்கள்தொகையில் 5இல் ஒரு பங்கு, அதாவது சுமார் 21%, அரபு மக்கள் ஆவர்.

சிறுபான்மையினரான அவர்களுக்கு எதிராக லிகுத் கட்சி தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் சூழலில் தேர்தலில் 16 இடங்களில் அரபு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் ஆத்திரம் அடைந்துள்ளது.

அரபு கட்சிகள் எதிரணி தலைவரான காடி ஐசென்கோட்க்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரபு கட்சிகள் இத்தேர்தலில் தாங்களே கிங் மேக்கர் என அறிவித்துள்ளன.

தேர்தலில் முறைகேடு

இந்நிலையில் அரபு கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்ததாக நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலை அரபு கட்சிகள் திருடிவிட்டதாக அவரின் லிகுத் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

எனவே இஸ்ரேல் காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முகாமையான ஷின் பெட் (Shin Bet) இந்த வாக்கு மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என ஆளும் லிகுத் ஆலைப்பு விடுத்துள்ளது.

குற்றச்சாட்டுகள்

தனது அதிகாரபூர்வ அறிக்கையில் லிகுத் கட்சி, "இஸ்ரேல் தேர்தலானது கையூட்டு, மிரட்டல், வன்முறை, பித்தலாட்டம் மற்றும் வாக்காளர்களை திரட்டும் சட்டவிரோத மென்பொருள் ஆகியவற்றை பயன்படுத்தி யூத நாட்டை அழிக்க முயலும் அரபு கட்சிகளால் திருடப்பட்டுள்ளது." என குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு "நூற்றுக்கணக்கான சாட்சியங்களை" காவல்துறையிடமும், ஷின் பெட் முகாமையிடமும், மத்திய தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிக்க உள்ளதாக லிகுத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரபு கட்சிகளால் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்களிக்க வரும் மக்களுக்கு மிரட்டல் மற்றும் வன்முறை பயன்படுத்தப்பட்டதாகவும் லிகுத் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் பல வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைவது, ஒரே நபர் இரட்டை வாக்குப்பதிவு மற்றும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை - பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை இடையே முரண்பாடு இருப்பதாகவும் குற்றம்சுமத்தியுள்ளது.

மேலும் குறிப்பாக வாக்காளர்களை திரட்ட சட்டவிரோத மென்பொருளை அரபு கட்சிகள் பயன்படுத்தியுள்ளதாகவும் இது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையக் குழுவை லிகுத் கோரியுள்ளது.

நேதன்யாகு

தேர்தல் பிரசாரத்தின்போதே, கூட்டணி அரசில் அரபு கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பது முறையற்ற ஒன்று என்று நேதன்யாகு கூறிவந்தார்.

மறுபுறம் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன குடிமக்கள் குறித்த அச்சத்தை விதைத்து வலதுசாரி வாக்காளர்களை கவர நேதன்யாகு முயன்று வருவதாக அரபு அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம்

இஸ்ரேல் மத்திய தேர்தல் கமிட்டி, லிகுத் மற்றும் பிற கட்சிகள் முன்வைத்த "தேர்தல் முறைகேடு" குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

அடுத்து என்ன?

மறுபுறம் தேர்தல் முடிவுகள் நேதன்யாகுவை அதிகாரத்திலிருந்து இறக்க இது சரியான வாய்ப்பு என்றும் வேறுபாடுகளை மறந்து ஆட்சி அமைக்க கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதான எதிரணியான ஐசென்கோட்டின் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.

அரபு கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் ஐசென்கோ ட் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. ஆனால் நேதன்யாகுவின் அணி பெரும்பான்மை இல்லாதபோதும் தற்போது முன்னிலையில் உள்ளதால் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் வாய்ப்பும் உள்ளது.

தற்போது ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் செலுத்திய தபால் ஓட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

இதிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அல்லது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com