உலகம்

ஈரான் பள்ளி குழந்தைகள் 168 பேர் பலியான விவகாரம் - அமெரிக்க அதிகாரிகளின் புகைப்படங்களை பகிர்ந்த தூதரகம்

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 157 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரானில் கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 123 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த தாக்குதலுக்கு காரணமான அமெரிக்க அதிகாரிகளை கண்டுபிடிப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று, மினாப் நகரில் அமைந்துள்ள ஷஜாரே தய்யேபே பள்ளி மீது அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட 123 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

மேலும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 157 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் தூதரகம்

இதையடுத்து இந்த தாக்குதலுக்கு காரணமான அமெரிக்க கடற்படை அதிகாரிகள் லெய் டேட் மற்றும் ஜெஃப்ரி யோர்க் ஆகிய இருவரின் புகைப்படங்களை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் மினாபில் உள்ள பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு, இந்த இரண்டு குற்றவாளிகள் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகள் பயின்று வந்த பள்ளியின் மீது தாக்குதலை நடத்திய இந்த இரண்டு அதிகாரிகளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லையா? எனவும் ஈரான் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளையும் நிச்சயம் கண்டுபிடிப்போம் எனவும் ஈரான் தூதரகம் பதிவிட்டுள்ளது.

ஈரான் மூத்த தூதர்

ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மூத்த தூதரான அயதுல்லா அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி கூறுகையில், இந்த ஏவுகணை தாக்குதலுக்காக அமெரிக்கா ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை என கூறினார்.

மேலும் இதில் கொல்லப்பட்ட பல குழந்தைகளின் உடல் இன்னும் கிடைக்கவில்லை எனவும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக சென்று அழுவதற்கு, அவர்களுக்கு எந்த கல்லறையும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அமெரிக்க கருவூல செயலாளர்

இந்த நிலையில் ஈரானின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தொடர்ந்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் வசித்து வந்த இல்லம், ரகசியமாக ஒரு ராணுவ தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெசன்ட் கூறுகையில், அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே, இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அதிபர் டிரம்பிற்கும், துணிச்சலான ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மரண அச்சுறுத்தல் வரும்போது, நான் ஏன் பயப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT