உலகம்

International Literacy Day 2026: மெக்சிகோவில் உலகளாவிய யுனெஸ்கோ மாநாடு கோலாகல தொடக்கம்

இந்த ஆண்டிற்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தின் மையக்கருத்து “மக்களுக்கு, பூமிக்கு மற்றும் செழிப்புக்கு எழுத்தறிவு”என்பதாகும்.

1966-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 14-வது பொது மாநாட்டின் போது, செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

இன்று (செப்டம்பர் 8) உலகம் முழுவதும் சர்வதேச எழுத்தறிவு தினம் வெகு விமரிசையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமை, சமத்துவம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான அடிப்படைத் தூணாகத் திகழும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் நோக்கில் இந்நாள் ஆண்டுதோறும் நினைவு கூரப்படுகிறது. இந்த 2026-ஆம் ஆண்டில், சர்வதேச எழுத்தறிவு தினம் தனது 60-வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பின்னணி

1966-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 14-வது பொது மாநாட்டின் போது, செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1967-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. வெறும் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனைக் கடந்து, தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எழுத்தறிவு அவசியம் என்பதை வலியுறுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து

இந்த ஆண்டிற்கான சர்வதேச எழுத்தறிவு தினத்தின் மையக்கருத்து “மக்களுக்கு, பூமிக்கு மற்றும் செழிப்புக்கு எழுத்தறிவு”(Literacy for people, the planet and prosperity) என்பதாகும். தனிமனித சமூக ஒருங்கிணைப்பு, சுற்றச்சூழல் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் எழுத்தறிவு எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மையக்கருத்து வெளிப்படுத்துகிறது.

யுனெஸ்கோ மாநாடு

2026-ஆம் ஆண்டின் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ உலகளாவிய கொண்டாட்டங்கள் மற்றும் மாநாடு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் நகரில் நடைபெறுகின்றன. மெக்சிகோ அரசுடன் இணைந்து நடத்தப்படும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் உலகளாவிய எழுத்தறிவுச் சவால்கள் மற்றும் அதற்கான கொள்கை ரீதியான தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், எழுத்தறிவுப் பணியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான யுனெஸ்கோ சர்வதேச எழுத்தறிவு விருதுகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளில் உலக அளவில் கல்வியறிவு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளபோதிலும், தற்போதைய தரவுகளின்படி உலகம் முழுவதும் சுமார் 739 மில்லியன் இளைஞர்களும் பெரியவர்களும் அடிப்படை எழுத்தறிவுத் திறன் இல்லாமல் உள்ளனர். மேலும், சர்வதேச அளவில் 10 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்குப் போதிய வாசிப்புத் திறன் எட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம் மற்றும் நிலையான சமூக வளர்ச்சிக்கு எழுத்தறிவை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி அனைவருக்குமான கல்வியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த 60-வது ஆண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் வலியுறுத்துகிறது.

SCROLL FOR NEXT