திபெத் பனிப்பாறை சரிவு பேரழிவு: சீன ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்!

திபெத்திய பீடபூமிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மை வரும் நாட்களில் மேலும் பலவீனமடையும்
Tibet glacier collapse
Published on
Summary

லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன.

திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் அண்மையில் நடந்த கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுக்குப் பின்னால் புவி வெப்பமயமாதலின் கொடூரப் பங்கு இருப்பதாக சீன அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன-நேபாள எல்லையில் ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த பனிப்பாறை உடைப்பு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

7 நிமிடங்களில் 22 கி.மீ பாய்ந்த பேராபத்து

லங்டாங் லிருங் மலையின் உயர் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை மற்றும் பாறைப் பகுதிகள் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளன. இவ்வாறு சரிந்த பனி, பாறை மற்றும் களிமண் கலவை வெறும் 6 முதல் 7 நிமிடங்களுக்குள் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிரோங் துறைமுகப் பகுதியைச் சென்றடைந்துள்ளது. மலையிலிருந்து சரிந்து வரும் வழியில் பாயும் ஆற்றின் படுக்கையிலிருந்த மணல், கற்கள் மற்றும் கரைகளின் இடிபாடுகளை இழுத்துக் கொண்டு வந்ததால், இது அதிவேகக் களிமண் வெள்ளமாக மாறியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் 24% சரிந்த பனிப்பரப்பு

சீன தேசிய காலநிலை மையத்தின் தகவலின்படி, கடந்த 60 ஆண்டுகளில் திபெத்திய பீடபூமியில் இருந்த பனிப்பாறை பரப்பளவு 51,000 சதுர கிலோமீட்டரிலிருந்து 39,000 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. இதன்மூலம் சுமார் 24 சதவீத பனிப்பாறைகள் உருகி மறைந்துள்ளதாகவும், 7,000 சிறிய பனிப்பாறைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திபெத்திய பீடபூமிப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மை வரும் நாட்களில் மேலும் பலவீனமடையும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வழக்கமான கனமழை அல்லது ஏரிகள் உடைவது போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இன்றி, உயர் மலைப்பகுதிகளில் திடீரென ஏற்படும் இத்தகைய பனிப்பாறைச் சரிவுகளைக் கண்டறிவது தற்போதைய தொழில்நுட்ப அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இதனால், செயற்கைக்கோள் அடிப்படையிலான நவீன கண்காணிப்பு முறைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com