உலகம்

சிந்து நதிநீரில் எங்கள் பங்கை தொட்டால் கைகளை வெட்டுவோம் - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்

இந்தியா மீது போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் அண்மையில் எச்சரித்திருந்தார்.

2025இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் சிந்து நதி நீரை பகிரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

பாதிப்பு

மேலும் சிந்துவின் கிளை நதியான செனாப் மீது அணை கட்டவும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரை நம்பியே பாகிஸ்தானின் பெரும்பாலான விவசாயம், மற்றும் பிற தேவைகள் உள்ளன.

எனவே சிந்து நதிநீர் நிறுத்தம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

மிரட்டல்

இதனால் அந்நாட்டின் தலைவர்கள் அவ்வப்போது இந்தியாவுக்கு மிரட்டல் விடுப்பது வழக்கமாகிவிட்டது. சிந்து நதிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டதாக தங்களுக்கு தெரியவந்தால் இந்தியா மீது போர் தொடுப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் இருவரும் நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய முசாதிக் மாலிக்,

துண்டிப்போம்

"எங்கள் நாட்டுக்கான நதிநீர் விநியோகத்தை அண்டை நாட்டின் பிரதமர் (மோடி) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார்.

எங்களது நதிநீர் உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்து, எங்கள் பங்கையும் எடுத்துக்கொள்பவர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்." என காட்டமாக பேசினார்.

செல்லுபடி

பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் பேசுகையில்,

"1960ல் உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் சர்வதேச சட்டங்களின்படி இன்னும் செல்லுபடியில் தான் உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்தியா எடுத்த தன்னிச்சையான முடிவிற்கு சர்வதேச அரங்கில் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை" என்று தரார் குறிப்பிட்டார்.

மாநாடு

இதனிடையே இந்த விவகாரத்தில் தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உலகிற்கு எடுத்துரைக்க, பாகிஸ்தான் அரசு சர்வதேச நதிநீர் நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இஸ்லாமாபாத்தில் நடத்த உள்ளது.