உலகம்

இந்தியா மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்

மோடியின் வழிகாட்டுதலின்படி வரும் ஜூன் 2028 க்குள் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்படும்.

தண்ணீருக்கு பாதகம் ஏற்பட்டால் இந்தியா மேல் போர் தொடுக்கவும் இஸ்லாமாபாத் தயங்காது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

2025 பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதன் பின்னர் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனடியே செனாப் நதியில் புதிய அணை கட்டும் இந்தியாவின் திட்டம் பாகிஸ்தானுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இந்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் பேசுகையில், 'பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி வரும் ஜூன் 2028 க்குள் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்படும்' என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப்,

"தண்ணீரும் எங்களது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதிதான். எங்களது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்றால் இந்தியாவிற்கு எதிராகப் போருக்குச் செல்வோம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்திய அரசு தண்ணீர் விநியோகத்தைத் தடுப்பதற்கான பணிகளை அதிவேமாக மேற்கொள்கிறது என்ற ஆதாரபூர்வமான தகவல் கிடைத்தால், போர் தொடுப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.