பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவின் 3 கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல்கள் பத்திரமாக கடந்துள்ளன.
சுமார் 8.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இக்கப்பல்கள் தற்போது இந்தியத் துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தேஷ் வைபவ்', 'தேஷ் விபோர்', 'சன்மார் ஹெரால்டு' ஆகிய மூன்று கப்பல்களும் மொத்தம் 94 இந்திய ஊழியர்களுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று கப்பல்களும் வரும் ஜூன் 24 முதல் ஜூலை 1க்குள் இந்திய கடற்கரையை வந்தடையவுள்ளன.
ஜூன் 19 அன்று அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி, ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைக்க வேண்டும்; அதற்குப் பகரமாக அமெரிக்கா ஈரான் மீதான சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும்.
இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தபோதும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 32 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மீண்டும் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.