உலகம்

மூன்று மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

இந்தியா தனது சொந்த கனவுகளை மட்டுமல்லாமல், நட்பு நாடுகள் அனைத்தின் கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோ மற்றும் அவரது முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் பேசிய மோடி, இந்தோனேசியத் தலைவரை "இந்தியாவின் உண்மையான நண்பர்" என்று குறிப்பிட்டார்.

வலுவான உந்துசக்தி:

"சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்" என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், இந்தியாவின் தன்னிறைவு என்பது இந்தோனேசியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆசியான் (ASEAN) பிராந்தியத்திற்கும் ஒரு வலுவான உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா தொடர்ந்து பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம், அதனால் தான் இன்று நாடு மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற மந்திரத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்.

பொருளாதாரம் தடைபடவில்லை:

இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான கனவுகளை நனவாக்கி கொண்டிருக்கும் ஒரு தேசம். ஆற்றல் துறை முதல் இணைப்பு வசதிகள் மற்றும் சிப் (chip) உற்பத்தி வரை, இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. இன்றைய இந்தியா தனது சொந்த கனவுகளை மட்டுமல்லாமல், நட்பு நாடுகள் அனைத்தின் கனவுகளையும் நிறைவேற்றி வருகிறது.

இந்தோனேசியாவாக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவாக இருந்தாலும் சரி, எங்கள் பொதுவான இலக்கு வளர்ச்சிதான். நாங்கள் காத்திருக்கவோ அல்லது நிற்கவோ முடியாது.

கொரோனா பெருந்தொற்று உலகைத் தாக்கியபோதும் இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிவிடவில்லை. மேற்கு ஆசியாவில் நெருக்கடி ஏற்பட்டபோதும் இந்தியாவின் பொருளாதாரம் தடைபடவில்லை. நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்; அதனால்தான் இந்தியா மாற்றத்தை நோக்கிச் செல்கிறது," என்று கூறினார்.