உலகம் முழுவதிலும் மோதல் நடக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக அட்டூழியங்களை செய்பவர்கள் மீது எந்தவித கருணையும் காட்டக்கூடாது என்றும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஐநாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, "போர் மற்றும் மோதல் காலங்களிலும் குழந்தைகள் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாவே தொடர்கிறது.
இருப்பினும் பள்ளிகளில் குண்டு வீசி, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் தண்டனையின்றி தப்பித்துக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது
உலகம் முழுவதும் குழந்தைகளின் அவலநிலை குறித்த சமீபத்திய ஐநா அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், போர் மண்டலங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை கவலைக்கிடமான விகிதத்தில் அதிகரித்துள்ளது.
ஒரே ஆண்டில், பள்ளிகள் மீதான தாக்குதல்கள் 44 சதவீதம் அதிகரித்துள்ளன. இன்று உலகெங்கிலும் 47 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் போரின் நிழலில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் 8.5 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கான அணுகல் கூட இல்லை என்பது, மனிதகுலத்தின் ஒட்டுமொத்த தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது.
மோதல் மண்டலங்களில் நேரில் பள்ளிகளுக்கு வந்து கற்க முடியாத சூழ்நிலைகளில், டிஜிட்டல் கல்வி ஒரு சிறந்த பாலமாகச் செயல்பட முடியும்.
போர்களுக்கு நடுவிலும் குழந்தைகள் கற்று வளர்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்.
கோவிட் பெருந்தொற்றின் இந்தியா செயல்படுத்திய 'தீக்ஷா' போன்ற டிஜிட்டல் கல்வி திட்டங்கள் போர் மண்டலங்களில் உள்ள குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
போர் மற்றும் பஞ்சத்தால் அண்டை நாடுகளில் இடம்பெயர்ந்த அகதிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களின் புனரமைப்பிலும் இந்தியா பங்கேற்று வருகிறது" என்று தெரிவித்தார்.