இம்ரான் கான் 
உலகம்

மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் அடைப்பு .. இம்ரான் கான் உடல்நிலை என்ன?

சிறப்பு மருத்துவ நிபுணர் குழு இம்ரான் கானுக்கு விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டது.

73 வயதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று 2023 முதல் சிறையில் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சில மணி நேரம் பரிசோதனைக்கு பின் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

முன்னதாக, சிறையிலுள்ள இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு 48 மணி நேரத்திற்குள் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ நிபுணர் குழு இம்ரான் கானுக்கு விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டது.

பரிசோதனை முடிவுகள்

அவரது ரத்த அழுத்த மாறுபாடுகள், சீரற்ற இதயத் துடிப்பு, தலைவலி, மனஅழுத்தம் மற்றும் அவரது வலது கண்ணில் ஏற்கனவே இருந்த பிரச்சனை பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைகளின் முடிவில் இம்ரான் கானின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு, அவரை உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர் உடனடியாக மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசியலில் அவரது உடல்நிலையும் சிறைவாசமும் தொடர்ந்து முக்கிய விவாதப் பொருளாக நீடித்து வருகின்றன. சிறையில் அவரை சித்திரவதை செய்வதாக தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைக்கு முன் அவரை நீதிமன்ற அனுமதியின்படி குடும்பத்தினர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.