ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயலையும், எண்ணெய் வசதிகளையும் இஸ்ரேல் நேற்று ஏவுகணைகள் மூலம் தாக்கியது.
அங்குள்ள ஆலை ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடந்ததாக அம்மாகாண துணை ஆளுநர் தெரிவித்திருந்தார். தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
பதிலடியாக கத்தாரின் ராஸ் லபான் தொழில்துறை நகரத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எல்என்ஜி எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதற்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து கத்தார் அமீர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார்.
இந்நிலையில் ஈரான் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலையும், கத்தார் எரிவாயு ஆலை மீதான ஈரானின் தாக்குதலையும் டிரம்ப் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகளின் கோபத்தால், ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் என்ற முக்கிய இடத்தின் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த முழுப் பகுதியில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட தாக்குதலைப் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது. மேலும், இதில் கத்தார் நாட்டிற்கு எந்தவிதமான தொடர்போ அல்லது இது நடக்கப்போகிறது என்ற தகவலோ தெரியாது.
துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், ஈரான் நியாயமற்ற முறையில் கத்தாரின் LNG எரிவாயு ஆலையின் ஒரு பகுதியைத் தாக்கியுள்ளது.
மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க இந்த தெற்கு பார்ஸ் வயல் மீது இஸ்ரேல் இனி எந்தத் தாக்குதலையும் நடத்தாது.
ஆனால், ஈரான் அறிவில்லாமல் அப்பாவி நாடான கத்தாரை மீண்டும் தாக்க முடிவு செய்தால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது இல்லாமலோ, தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் தடயமே இல்லாமல் அமெரிக்கா நிர்மூலமாக்கும்.
ஈரானின் எதிர்காலத்தில் இது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இந்த அளவிலான வன்முறையையும் அழிவையும் அனுமதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், கத்தாரின் LNG நிலையம் மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்கமாட்டேன்" என்று மிரட்டல் விடுத்தார்.