ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபியா ஆதரவை பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே நடந்த மோதலில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி இயக்கத்திற்கும் சவுதி அரேபியா ஆதரவை பெற்ற ஏமன் அரசாங்க படைகளுக்கும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014-ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனா நகரத்தை கைப்பற்றி, அப்போதைய அரசாங்கத்தை வெளியேற்றினர்.
அதை தொடர்ந்து சவுதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹவுதிகளை எதிர்த்து போராடவும் தொடங்கியது.
இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசாங்க படைகளுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு போர் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில், ஈரான் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிரங்க முயன்றது. அப்போது ஏமன் அரசாங்கம் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் உள்ள மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் ஹவுதிகள் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஏமன் அரசாங்க படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை சேர்ந்த 129 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று ஏமனின் தென்மேற்கு பகுதியில் ஹவுதிகள் மீண்டும் நடத்திய தாக்குதலில், 26 ஏமன் அரசாங்க படையினரும், 31 ஹூதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.
ஏமன் கடற்கரையோர துறைமுக நகரங்களை ஒட்டி அமைந்துள்ள, பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், ஹவுதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
சூயஸ் கால்வாய்க்கு செல்லும் கப்பல்களுக்கு பாப் அல்-மண்டேப் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்வழி தளமாக உள்ளது. உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியா பல மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய இந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.
மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதன் விளைவாக ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள உலகளாவிய பொருட்களின் விலையை, பாப் அல்-மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது மேலும் அதிகரிக்க செய்யும் என அஞ்சப்படுகிறது.
ஹவுதிகள் அந்த துறைமுக நகரத்தை மீண்டும் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமுள்ள முக்கிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும்.
ஹவுதிகளின் தாக்குதல் குறித்து ஏமன் அரசாங்க ராணுவ அதிகாரி கூறுகையில், ஹவுதிகளின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரத்தில் இருந்து கூடுதல் படைகள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.