கடந்த வாரம் எட்டப்பட்ட ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு சீர்குலைந்து ஒரே வாரத்தில் மீண்டும் மோதல் வெடித்தது.
கடந்த வாரம் எட்டப்பட புரிந்துணர்வு படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும்.
அதற்குப் பதிலாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இருப்பினும், ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்கள் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துவதாலும், அமெரிக்கா அதை எதிர்ப்பதாலும் இந்த சர்ச்சை ஏற்பட்டது. தங்கள் அனுமதியின்றி நுழைந்ததாக வணிக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா அந்நாட்டு ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக பஹ்ரைன், குவைத் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை அமெரிக்கா குறிவைத்தது.
ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் சேமிப்புக் கிடங்குகள், மற்றும் அவர்களின் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
இதனிடையே மீண்டும் முழுமையான போர் ஏற்பட்டால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸின் முன்முயற்சியால் தற்போதைய பதற்றத்தை தணிக்க, கத்தார் தலைநகர் தோஹாவில் ஈரான் - அமெரிக்கா இடையே நாளை அவசர பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மேலும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிக் ஸ்டீவர்ட் தலைமையிலான அமெரிக்க குழு தோஹா பேச்சுவார்த்தையில் நாளை பங்கேற்கிறது.
அமெரிக்க ராணுவத்திற்கும் ஈரான் புரட்சிகர காவல் படையினருக்கும் இடையே ஒரு தகவல் தொடர்பு ஹாட்லைனை நிறுவுவதும் தவறான புரிந்ததால் எதிர்கால கடல்சார் மோதல்களை தடுப்பதும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாகும்.
தற்போதைய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதால், ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.