உலகளவில் கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நாடாகத் திகழும் கனடாவில், பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அறுவடைக்குத் தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோதுமை மற்றும் கனோலா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் தற்போது முதல்தர கோதுமை மற்றும் கடுகு எண்ணெய்க்கான கனோலா பயிர்கள் விளைந்து, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே அங்கு தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது.
வயல்களில் பல அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் முற்றிலும் திணறி வருகின்றனர். பல வாரங்களாகப் பயிர்கள் நீரிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவை அழுகி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
தொடர்மழையின் காரணமாக விளைநிலங்களில் தேங்கியுள்ள நீரால் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சில பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமைப் பயிர்கள் மழைநீரால் தங்களின் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிப் போயுள்ளன.
வெள்ளப்பெருக்கு அதிகமுள்ள இடங்களில் பயிர்கள் வேரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், பூஞ்சை காளான் தொற்று பரவி ஒட்டுமொத்தப் பயிர்களையும் பாழாக்கிவிடும் என அஞ்சப்படுகிறது.
மழைப்பொழிவு நீடித்தாலும், கனடா விவசாயிகள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்நாட்டில் வழக்கமாக நவம்பர் மாதத்தில்தான் பனி படர்ந்து, மண் உறைந்து போகக் கூடிய குளிர்காலம் தொடங்கும்.
எனவே, அதற்குள் மழை நின்றுவிட்டால் எஞ்சியிருக்கும் பயிர்களை அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனினும், இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தால் உலகளாவிய கோதுமை மற்றும் கனோலா எண்ணெய் சந்தையில் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.