பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
அப்போது கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி நிலையத்தின் அருகே, மழைக்காக ஒதுங்கி தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கட்டிடத்தின் சுவரும் கூரையும் இடிந்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் மட்டும் 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு சம்பவத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர். கிளிப்டன் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நகரின் பல இடங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சிலர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சூறாவளிக் காற்றினால் மரங்கள் மற்றும் ராட்சத விளம்பரப் பலகைகள் வேரோடு சாய்ந்தன. மழையினால் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்ததால், கராச்சி மாநகரின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கராச்சி மேயர் முர்தாசா வஹாப் விடுத்துள்ள அவசர குறிப்பில் "நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதால் தீவிர மீட்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.