

ஈரான் போரினால் மத்திய கிழக்கு பற்றி எரியும் நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நிலவி வந்த மோதலுக்கு தற்காலிக முடிவு பிறந்துள்ளது.
சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று, வரவிருக்கும் ஈத் பெருநாளை முன்னிட்டு இரு நாடுகளும் தற்காலிக சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இன்று (மார்ச் 19) நள்ளிரவு முதல் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) நள்ளிரவு வரை 5 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும்.
பாகிஸ்தான் தகவல்தொடர்புதுறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் அறிவிப்பைத் தொடர்ந்து தலிபான் அரசும் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
இஸ்லாமிய விழுமியங்களை மதித்து இந்த அமைதி நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்தோ அல்லது பயங்கரவாதிகளிடமிருந்தோ ஏதேனும் தூண்டுதல் ஏற்பட்டால், அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக இந்த வாரம் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.