இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பெற்ற வெற்றிக்கு பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிஜேபி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடந்து வந்த நிலையில் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை கடந்த வாரம் நிறைவேறியது.
மேலும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து மௌனம் களைத்த பிரதமர் மோடி, தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா, விரைவு நீதிமன்றங்கள், உயர்மட்ட குழு அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார். தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிரெட்டா துன்பெர்க் பங்கேற்றார்.
இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ யுகே அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்திய எஸ்எப்ஐ, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறையைக் கடுமையாகக் கண்டித்தது.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கிரெட்டா துன்பெர்க்,
"இந்திய மாணவர்களின் இந்த வீரமிக்க போராட்டம் உலகம் முழுவதிலும் உள்ள செயல்பாட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் பெருமையையும் அளித்துள்ளது.
மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு நின்றால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக இந்திய மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் உலகளாவிய தேவையாக இருந்தது." என தெரிவித்தார்.
எஸ்எப்ஐ அகில இந்தியத் தலைவர் வி.பி. சானு உட்படப் பல தலைவர்கள், கிரெட்டா துன்பெர்க் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.