'கரப்பான்பூச்சிகள்' என அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு நன்றி தெரிவித்த அபிஜித் தீப்கே!

3 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு முன்னெடுத்த நிலையில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார்.
தீப்கே, சூர்யகாந்த்
தீப்கே, சூர்யகாந்த்
Published on

டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய CJP நிறுவனர் அபிஜித் தீப்கே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை குறிப்பிட்டுப் பேசிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தீப்கே பேசுகையில்,

"தலைமை நீதிபதி சூரியகாந்த் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களை 'கரப்பான்பூச்சிகள்' என்று அழைக்காமல் இருந்திருந்தால், நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியிருக்க மாட்டேன். இந்த மாபெரும் மக்கள் போராட்டமும் தொடங்கியிருக்காது!" என்று தெரிவித்தார்.

'கரப்பான்பூச்சி' சர்ச்சை

மே 15 அன்று வழக்கறிஞர் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, "பணியோ அல்லது வாழ்க்கையில் சரியான இடமோ இல்லாமல் சுற்றித் திரியும் 'கரப்பான்பூச்சிகள்' போன்ற இளைஞர்கள் பலர் உள்ளனர்" என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்து சர்ச்சையானது.

அடுத்த நாளே மே 16 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உதயமானது. அமெரிக்காவின் போஸ்டனில் படித்து வந்த அபிஜித் தீப்கே, இக்கருத்தை எதிர்த்து எக்ஸ் தளத்தில் 'ரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை அறிவித்தார்.

சர்ச்சை வலுத்த நிலையில் , தாம் போலி சட்டப் பட்டம் பெற்றவர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டதாக சூர்யகாந்த் விளக்கமளித்தார்.

சிஜேபி

ஆனால் அதற்குள் சிஜேபி கட்சிக்கு இணையத்தில் பாலோயர்கள் குவிந்தனர். இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களிலும் சிஜேபி கணக்கு உருவாகி குறுகிய காலத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்துக்கு இருந்த பாலோயர்களை கடந்து அதிக பாலோயர்களை பெற்றது சிஜேபி.

காலவரையற்ற போராட்டம்

தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியா திரும்பிய அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். பின்னர் அவரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடத்தினார். களத்திற்கு பல இளைஞர்கள் ஆர்வமுடன் வந்தனர்.

தொடர்ந்து சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று முறையே காலவற்றையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது. அவர்களின் பிரதான கோரிக்கை, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதாகும்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஜூன் 28 அன்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

பெருகிய ஆதரவு

ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் மற்றும் மத்திய படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்திற்கு ஆதரவு பன்மடங்கு பெருகியது. பிற மாநிலங்களிலும் போராட்டம் பரவியது.

வெற்றி

தொடர்ந்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து, 26 நாட்களாக நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நிறைவு செய்தார். ஆனால் பிரதான் பதவி விலகும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்தது. அவர்களுடனான 3 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு முன்னெடுத்த நிலையில் நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார்.

தலைமை நீதிபதியின் ஒரு சர்ச்சை வார்த்தையில் தொடங்கி, நாட்டின் கல்வி அமைச்சரின் ராஜினாமா வரை கொண்டு சென்ற இந்த கரப்பான்பூச்சி இயக்கத்தின் வெற்றி, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் போராட்டமாகப் பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com