2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர். 251 பேர் வரை பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் சுமார் 3 ஆண்டுகளாக கடந்த ஆண்டு அக்டோபர் வரை காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஏற்படுத்திய தற்காலிக போர் நிறுத்தம் கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்தாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 73,001 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் இன்று (ஞாயிறு) அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,73,200 ஐ கடந்துள்ளது.
மேலும் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் மருந்து பொருட்களை இஸ்ரேல் தடுத்துள்ளதால் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்படுள்ளது.
இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட உணவுப்பொருட்கள் முடக்கம், மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் என ஐநா அறிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் தொடர் திட்டமிட்ட தாக்குதல் இனப்படுகொலை எனவும் வகைப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவின் தெற்கே கான் யூனிஸ் நகரில் இருவர், மத்திய காசா பகுதியில் ஒருவர் மற்றும் ஏற்கனவே படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர் என மொத்தம் 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
காசா பகுதியில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 73,001 ஆக உயர்ந்துள்ளது.