உலகம்

மனைவி மறைந்த மனவேதனையில் மலேசிய முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர் தேசிய இதய சிகிச்சை மையத்தில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமரும், நவீன மலேசியாவின் சிற்பியுமான மகாதிர் முகமது (101), தனது மனைவி துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமது அலியின் (100) திடீர் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிர மனவேதனை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

70 ஆண்டுகால வாழ்வின் பிரியாவிடை

மருத்துவரான சித்தி ஹாஸ்மா, செப்டம்பர் 28 அன்று தனது 100-வது வயதில் தேசிய இதய சிகிச்சை மையத்தில் காலமானார். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் இவர்களது 70-வது திருமண நாள் நிறைவுபெற்றது. தனது மனைவியின் இறுதிச்சடங்கின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மகாதிர் முகமது கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மலேசிய மக்களையும் உலுக்கியது.

மருத்துவமனையில் அனுமதி

மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு செப்டம்பர் 29 அன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாகக் கோலாலம்பூர் தேசிய இதய சிகிச்சை மையத்தில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழக்கம் உடையவர் என்பதால், சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

மருத்துவர்களின் அறிக்கை

மகாதிர் முகமதுவின் உடல்நிலை குறித்துப் பேசிய அவரது மகன் மொக்சானி மகாதிர், கடந்த சில நாட்கள் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளித்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT