

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று (புதன்கிழமை) சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்) நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மங்களூருவில் அமைந்திருந்த நிறுவனத்தின் ஹைட்ரோ சல்பர் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து நண்பகல் வாக்கில் ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்குக் கேட்டது.
அதைத் தொடர்ந்து ஆலை தீப்பிடித்து எரிந்ததோடு, ஆலையிலிருந்து அடர்த்தியான புகையும் எழுந்தது. இந்த வெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிற்பகல் 2:47 மணியளவில் தீ அணைத்துவிட்டதாக எம்.ஆர்.பி.எல் தெரிவித்தது.
எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக எம்.ஆர்.பி.எல் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ருடால்ப் நொரோன்ஹா தெரிவித்தார்.
இந்த விபத்தில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த மணீஷ் கர்கடா (30) என்ற நபர் உயிரிழந்ததாகவும் மேலும் 11 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
முல்கி அருகே உள்ள ஹாலேயங்கடியில் வசித்து வந்தவர் மணீஷ். மணீஷின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு இரவு தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மணீஷின் மாமா இம்மானுவேல் கருணாகர், மணீஷ் கடந்த ஒரு வருடமாக எம்.ஆர்.பி.எல் நிறுவனத்தில் மின்சாரப் பராமரிப்புப் பிரிவில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிவித்தார்.
பல மணி நேரமாகத் தங்கள் குடும்பத்தினர் மணீஷின் இருப்பிடத்தைக் கண்டறிய முயன்று வந்ததாகவும், இறுதியில் மணீஷின் மூத்த சக ஊழியர் ஒருவர் மூலமாகவே அவரது மரணம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மங்களூரு காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி, மணீஷின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது" என்று கூறினார்.
மற்றொரு தொழிலாளியான ராஜேஷ்க்கு 35% தீக்காயங்கள் ஏற்பட்டதையடுத்து, சீனிவாசா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏனையோர் சிறு காயங்களுக்கு உள்ளாகி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றனர்.