உலகம்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய வீடியோவை எடுத்த முன்னாள் விமானப்படை அதிகாரி மர்ம மரணம்

மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று நதி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் விமானப்படை அதிகாரியான தாஹ்சிஃப் சௌரியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அந்த வீடியோவை வெளியிட்டதற்காக அவர் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் தொல்லைகளையும் எதிர்கொண்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தாஹ்சிஃப் சௌரி , டாக்காவில் உள்ள துராக் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது ஆடையில் இருந்த கைப்பேசி மற்றும் கைக்கடிகாரத்தைக் கொண்டு உடல் அடையாளம் காணப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாணவர்களின் எழுச்சி மற்றும் வன்முறை காரணமாக ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தபோது, அவர் விமானத்தில் ஏறும் காட்சிகளைத் தன் கைப்பேசியில் பதிவு செய்து வெளியிட்டது இந்த இளம் விமானப்படை அதிகாரி தாஹ்சிஃப் சௌரிதான் என்று பரவலாகக் பேசப்பட்டது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் உள்ளிட்ட சில விமானப்படை அதிகாரிகள் முறையான நடைமுறைகளின்படி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொலை குற்றச்சாட்டு

முன்னாள் விமானப்படை அதிகாரியான தாஹ்சிஃப் சௌரியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அந்த வீடியோவை வெளியிட்டதற்காக அவர் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் தொல்லைகளையும் எதிர்கொண்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தச் சம்பவம் அரங்கேறியிருப்பது வங்கதேச அரசியல் வட்டாரத்திலும் பாதுகாப்புத்துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவு

மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று நதி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தாஹ்சிஃப்பின் மரணம் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர், இந்த விவகாரம் குறித்து இப்போதைக்குக் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், முதற்கட்ட விசாரணையும் பிரேத பரிசோதனையும் முழுமையாக முடிந்த பின்னரே மேலதிக விவரங்கள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT