நெதன்யாகு ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க தயார்- அரபு கட்சிகள் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரம் நாளை வெளியாகும்.
Arab- israel
Published on: 

120 இடங்களை கொண்ட இஸ்ரேலுக்கு பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் மற்றும் ராம் ஆகியவை இணைந்து 19 இடங்களை பெற்று உள்ளன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவையாகும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் அரபு கட்சிகள் முக்கிய வகிக்கும் சூழல் உருவாக்கி இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரம் நாளை வெளியாகும். அதன்பின் தேர்தல் முடிவுகள் நவம்பர் 4-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதையடுத்து ஆட்சி அமைக்க 42 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காதது நெதன்யாகுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தபோதிலும் ஆட்சி அமைக்க அவர் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அதேவேளையில் அரபு கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவரான காடி ஐசன் கோட்டும் ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு

இந்தநிலையில் எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அரபு கட்சிகள் அறிவித்து உள்ளன.

இதுதொடர்பாக அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர எங்களது முழு பலத்தையும் பயன் படுத்துவோம்.

மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசியல் ஒத்துழைப்புக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் இனவெறிக் கொள்கைகளுக்கு மாற்றாக, ஒரு உண்மையான மாற்றத்தை முன்வைக்கும் அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.

அரபு மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், அரசியல் அமைப்பிலிருந்து இந்தச் சமூகத்தையும் அதன் பிரதிநிதிகளையும் ஒதுக்கிவைக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பாடுபடும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அரபு கட்சிகளின் ஜாயிண்ட் லிஸ்ட் அணி தலைவர் அஹ்மத் திபி கூறும்போது," நெதன்யாகுவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க காடி ஐசன் கோட்டின் அணிக்கு உதவ எங்களது அணி தயாராக இருக்கிறது.

ஐசன்கோட்டின் அணியிடமிருந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. நெதன்யாகு அரசாங்கத்தைக் கவிழ்க்க அவருக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com