பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலாவன் மாகாணத்தின் கோரோன் தீவு அருகே, பயணிகள் படகு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.
MV June Aster என்ற பயணிகள் படகு தலைநகர் மணிலாவிலிருந்து புறப்பட்டுப் பலாவன் மாகாணத்தின் கோரோன் பகுதியை நெருங்கியபோது, நேற்று (புதன்கிழமை) இரவில் எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
படகில் மொத்தம் 134 பேர் பயணித்தனர். இதில் 117 பயணிகளும் 17 படகு ஊழியர்களும் அடங்குவர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான எஞ்சிய 87 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் 7,100 தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸில், தீவுகளுக்கிடையே மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்ல குறைந்த கட்டணப் படகுகளே முதன்மைப் போக்குவரத்தாகப் பயன்படுகின்றன.
எனவே பிலிப்பைன்ஸில் படகு விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக 2023 இல் ஜம்போங்கா நகரிலிருந்து பாசிலன் தீவுக்குச் சென்ற படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய விபத்தில் 87 பேரைக் காணவில்லை என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆண்டிற்கு சராசரியாக 20 புயல்களை எதிர்கொள்ளும் இந்நாட்டில், பருவமழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
படகுகளின் குறைந்த பராமரிப்பு, போதிய பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாதது இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.