ம.பி. மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து.. பிறந்த குழந்தை பலி - இரு குழந்தைகள் காயம்

33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
ம.பி. மருத்துவமனை தீ விபத்து
ம.பி. மருத்துவமனை தீ விபத்து
Published on: 

மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரசு மருத்துவமனை

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையி இன்று அதிகாலை 1:50 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது.

புதிதாக பிறக்கும் குறைந்த எடையுள்ள மற்றும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்கப் பயன்படும் Cradle Warmer இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தீப்பொறி உருவானதாகக் கூறப்படுகிறது.

தீ பரவல்

வார்மர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீ, அங்கிருந்த படுக்கை விரிப்புகளுக்கும் பரவியது.

தீ பரவுவதைக் கண்டவுடன் அங்குப் பணியிலிருந்த ஊழியர்கள், எரியும் வார்மர் இயந்திரத்தை மற்ற குழந்தைகளிடமிருந்து தள்ளி நகர்த்தினர்.

அதே பிரிவில் சிகிச்சையில் இருந்த 33 குழந்தைகளும், அருகிலுள்ள வெளிப்புறப் பிரிவில் இருந்த 30 குழந்தைகளும் பத்திரமாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், தீ மேல் தளத்திலிருந்த மகப்பேறு வார்டுக்குப் பரவாமலும் தடுக்கப்பட்டது.

இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் இருந்த 3 குழந்தைகள் தீக்காயமடைந்துள்ளன.

உயிரிழப்பு

காயமடைந்த 3 குழந்தைகளும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. எனினும், குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கையில் அக்குழந்தை தீக்காயங்களால் இறக்கவில்லை என்றும், பிறப்பிலேயே இருந்த தீவிர சுவாசக் கோளாறு பிரச்சனையாலேயே உயிரிழந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற இரு குழந்தைகள் தற்போது சீரான உடல்நிலையுடன் உள்ளனர்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உமங் சிங்கார், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக தீவிபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com