காங்கோவில் தீவிபத்து  
உலகம்

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து - உடல் கருகி 22 பேர் உயிரிழப்பு

வறண்ட காலநிலையின் போது இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

காங்கோவில் திருமண விழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிருடன் கருகி உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாஷாவின் வடக்கு பகுதியில் உள்ள லிங்வாலா மண்டலத்தில் நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று காலை வரை விடிய விடிய தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக லிங்வாலா மேயர் நோர்பர்ட் முஷிங்கா தெரிவித்துள்ளார்.

விபத்தின் பின்னணி

தீப்பற்றிய கட்டிடத்தின் பாதைகள் மற்றும் சந்துப் பாதைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், உள்ளே இருந்த மக்கள் உடனடியாக வெளியேற முடியாமல் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கித் தீயில் கருகினர்.

பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு பலரை வெளியே மீட்டுச் சாலையோரம் கிடத்தினர். அவர்களில் சிலர் காயங்களுடன் தப்பிய நிலையில், பலர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விசாரணை

தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காங்கோ துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஜாக்குமின் ஷாபானி நேற்று காலை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கின்ஷாஷாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் வறண்ட காலநிலையின் போது இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மருத்துவமனை ஒன்றில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பிறந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT