உலகம்

ராணுவ சட்டத்தை மீறிய பிரபல கே-பாப் நட்சத்திரம்: ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

இந்த தண்டனையின் காரணமாக அவர் மீதமுள்ள பணிக்காலத்தை மீண்டும் நிறைவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவான 'வின்னர்' அமைப்பின் முன்னணி பாடகர் சாங் மின்-ஹோ, தனது கட்டாய ராணுவ சேவையை முறைப்படி செய்யத் தவறிய வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவிலான கே-பாப் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ சேவையில் விதிமீறல்

தென் கொரிய சட்டப்படி உடற்தகுதி படைத்த அனைத்து ஆண்களும் குறிப்பிட்ட வயதுக்குள் குறைந்தபட்சம் 18 மாதங்கள் ராணுவத்திலோ அல்லது மாற்று சமூக சேவைகளிலோ கட்டாயம் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் பாடகர் மின்-ஹோ, சியோலில் உள்ள சமூக சேவை மையத்தில் மாற்றுச் சேவை பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், பணிக்காலத்தில் எந்தவித முறையான அனுமதியும் இன்றி சுமார் 102 நாட்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது ராணுவ நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த சியோல் மேலை மாவட்ட நீதிமன்றம், நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய ராணுவச் சேவையை அலட்சியப்படுத்தியது கடுமையான குற்றம் என்று சுட்டிக்காட்டியது. வழக்கின் முடிவில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதனை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் சலுகையையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நாட்டு மக்களிடம் மன்னிப்பு

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்-ஹோ, தன் மீது அளப்பரிய அன்பு செலுத்திய ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இருப்பினும், இந்த தண்டனையின் காரணமாக அவர் மீதமுள்ள பணிக்காலத்தை மீண்டும் நிறைவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், அவரது கலைப்பயணம் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT