

இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்திய பிறகும் அவரது உயிர் பிரியாததால், தண்டனை நிறைவேற்றம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா பைக் எனும் பெண்ணுக்கு தற்போது 50 வயதாகிறது. இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவரது மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதன்படி, சிறை வளாகத்தில் வசம் உள்ள தண்டனை அறையில் அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டது. பொதுவாக விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் இதயம் இயங்குவது நின்று மரணம் சம்பவிக்கும். ஆனால் கிறிஸ்டா பைக்கிற்கு முதல் முறை ஊசி செலுத்தப்பட்டு 3 நிமிடங்கள் கழித்து திரை விலக்கி பார்க்கப்பட்ட போது, அவர் இறக்கவில்லை என்பதும், அவரிடம் இருந்து குறட்டை சத்தம் வந்ததும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக திரை மூடப்பட்டு, அவருக்கு இரண்டாவது முறையாகவும் விஷ ஊசி செலுத்தப்பட்டது.
இரண்டாவது முறை விஷ ஊசி செலுத்தப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் வரை காத்திருந்தபோதும் அவரது உயிர் பிரியவில்லை. மாறாக அவர் சுவாசித்துக்கொண்டே இருந்தார். இதனால் மேலும் தண்டனையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தினர். இதனையடுத்து, தீவிர மருத்துவ கண்காணிப்பிற்காக அவர் சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
டென்னஸி மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. இத்தகைய சூழலில், கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற முயன்ற போது நிகழ்ந்த இந்த அரிதான மருத்துவ பின்னடைவு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.