

ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் தொழில்முறை சாகச கலைஞர் ஒருவர், தன் உடல் முழுவதிலும் தீ மூட்டப்பட்ட நிலையில் 47 வினாடிகள் தலைகீழாக நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த 35 வயதான பிலிப் கர்ஜிஸ்னிக் என்ற திரைப்பட சாகச ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர், இந்த ஆபத்தான சாதனையை முயற்சித்தார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
உடலெங்கும் தீ பிடித்துள்ள நிலையில் தலைகீழாக நிற்பது என்பது மிகக் கடுமையான உடல் வலிமையும், மனக் கட்டுப்பாடும் தேவைப்படும் ஒரு கலையாகும். சாகசத்தின் போது தீயின் வெப்பம் மற்றும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்கவும், தோல் கருகாமல் தடுக்கவும் சிறப்புப் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் வழலைகளைப் பயன்படுத்தி இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டது.
இந்த சாதனை குறித்து நகைச்சுவையாக பேசிய பிலிப் கர்ஜிஸ்னிக், "குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடைக்கவில்லை" என்று கூறினார். மேலும், "நான் 45 வினாடிகள் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் 47 வினாடிகள் நின்றது மகிழ்ச்சியளிக்கிறது, இருப்பினும் 60 வினாடிகள் வரை நின்றிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார். முழுமையாக தீப்பற்றி எரியும் நிலையில் தலைகீழாக நின்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையை பிலிப் கர்ஜிஸ்னிக் இதன் மூலம் பெற்றுள்ளார்.