உலகம்

படுகொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை.. டிசம்பரில் வங்கதேசம் திரும்புவது உறுதி - ஷேக் ஹசீனா

அரசியல் பழிவாங்குதலுக்குப் பதிலாக நல்லிணக்கத்தின் மூலம் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

படுகொலை செய்யப்பட்டாலும் தான் டிசம்பர் மாதம் தாயகம் திரும்பும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் மாதம் தனது தாய்நாட்டிற்கு திரும்புவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.

வங்கதேசம்

மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு தப்பிய அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தலில் வென்று தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அமைந்தது.

மரண தண்டனை

இதனிடையே மாணவர் போர்த்தத்தின்போது அடக்குமுறையை கையாண்டு மனிதாபிமானதிற்கு எதிரான குற்றங்களை செய்ததாக ஷேக் ஹசீனா மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவரை நாடு கடத்த கோரி வங்கதேசம், இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே சில மாதங்கள் முன்பு தான் டிசம்பரில் வங்கதேசம் திரும்ப உள்ளதாக ஹசீனா அறிவித்தார்.

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்தியாவில் இருந்து காணொளி வாயிலாக ஷேக் ஹசீனா இன்று பங்கேற்றார்.

காணொளி

அதில் பேசிய அவர், தனக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் தனது ஆதரவாளர்களுக்கு துணை நிற்பதை ஒரு அரசியல் பொறுப்பாகக் கருதுவதாக அவர் கூறினார்.

தாயகம் திரும்புவது ஆபத்தானது என்று தெரிந்தாலும், பின்வாங்குவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டாலும், சித்திரவதை செய்யப்பட்டாலும், அல்லது கொல்லப்பட்டாலும் கூட பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலம்

கடந்த காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளாமல் தான் முடிவுகளை எடுத்ததாக தெரிவித்த ஹசீனா 1975ல் தனது குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தான் எதிர்கொண்ட சூழ்நிலைகளை நினைவு கூர்ந்தார்.

2024 போராட்டங்கள் மற்றும் தனது அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும் அதே நேரம் அதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வங்கதேசத்தின் எதிர்காலம்

வங்கதேசத்தின் எதிர்காலம், சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக செயல்முறையின் மூலம் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஹசீனா கூறினார்.

நீதித்துறையின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் பழிவாங்குதலுக்குப் பதிலாக நல்லிணக்கத்தின் மூலம் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே அவரது மகன் சாஜிப் வாஜித் ஜாய், தாயகம் திரும்பும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், உரிய நேரத்தில் அது அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT