உலகம்

மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு - புதிய சவாலாக உருவெடுத்துள்ள 'சார்ஜர் ரேஜ்'

மின்சார வாகனங்களின் பேட்டரி 80 சதவீதத்தை எட்டிய பிறகு, மீதமுள்ள 20 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும்.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொது சார்ஜிங் மையங்களில் வாகனங்களை சார்ஜ் செய்வதில் ஓட்டுநர்களிடையே ஏற்படும் வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் தற்போது 'சார்ஜர் ரேஜ்' என்ற புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 1,58,000 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது மொத்த புதிய கார் விற்பனையில் 26 சதவீதமாகும். இதன் மூலம் அந்நாட்டுச் சாலைகளில் ஓடும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொது சார்ஜிங் நிலையங்கள் இல்லாததால், 46 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சார்ஜருக்கு 39 வாகனங்கள் என்ற விகிதத்துடன் ஆஸ்திரேலியா 7-வது இடத்தில் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், சார்ஜிங் நிலையங்களில் மோதல்களைத் தவிர்க்க ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நாகரிக விதிகள் குறித்து நிபுணர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

பேட்டரி சார்ஜ்

சாதாரண பெட்ரோல் நிலையங்களைப் போலன்றி, மின்சார வாகன சார்ஜிங் மையங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும் விதம் சற்று மாறுபட்டது. எல்லா சார்ஜர்களும் நிரம்பியிருக்கும் போது, ஏற்கனவே யார் காத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்து வரிசையில் உங்கள் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சார்ஜர் காலியானதும், அதற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதற்காக முந்திக்கொண்டு செல்வது தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். அதேபோல், பொது சார்ஜிங் இடங்கள் என்பது சாதாரண வாகன நிறுத்துமிடம் அல்ல என்பதை ஓட்டுநர்கள் உணர வேண்டும். பேட்டரி சார்ஜ் ஆகி முடிந்த பிறகும் காரை அங்கேயே நிறுத்தி வைப்பது மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, சார்ஜிங் நிலையை மொபைல் செயலி மூலம் தொடர்ந்து கண்காணித்து, சார்ஜ் முடிந்தவுடன் வாகனத்தை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

தேவையான அளவு சார்ஜ் செய்தல்

மின்சார வாகனங்களின் பேட்டரி 80 சதவீதத்தை எட்டிய பிறகு, மீதமுள்ள 20 சதவீதம் சார்ஜ் ஆவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கும். எனவே, மற்ற ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருக்கும் போது, உங்கள் பேட்டரியை 100 சதவீதம் வரை நிரப்ப வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்காமல், உங்கள் பயண இலக்கையோ அல்லது அடுத்த சார்ஜிங் நிலையத்தையோ சென்றடையத் தேவையான அளவு சார்ஜ் ஏறியதும் இடத்தை விட்டுக்கொடுப்பது சிறந்த பண்பாகும். மேலும், சக ஓட்டுநர்களிடம் யூகங்களின் அடிப்படையில் செயல்படாமல் வெளிப்படையாகப் பேசுவது பல சிக்கல்களைத் தீர்க்கும். அவசரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கோ அல்லது மிகக் குறைந்த நேரமே சார்ஜ் செய்ய வேண்டியவர்களுக்கோ முன்னுரிமை அளிப்பது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

ஆய்வுகள்

சார்ஜிங் நாகரிகம் குறித்து நெதர்லாந்தில் 246 மின்சார வாகன ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சார்ஜ் முடிந்ததும் வாகனத்தை நகர்த்துவதே மிக முக்கியமான ஒழுக்கமாகப் பெரும்பாலானோரால் குறிப்பிடப்பட்டது. இருப்பினும், இரவு நேரங்களில் சார்ஜ் போட்டுவிட்டு நள்ளிரவில் எழுந்து வாகனத்தை நகர்த்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்டர்டாமில் 21 லட்சம் சார்ஜிங் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பெரும்பாலான ஓட்டுநர்கள் வாகனத்தை நகர்த்த விரும்புவதாகக் கூறினாலும், நடைமுறையில் 16.2 சதவீத ஓட்டுநர்கள் மட்டுமே சார்ஜ் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களது வாகனங்களைத் துண்டித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கட்டண அபராதங்கள்

சார்ஜர்களைத் தேவையின்றி ஆக்கிரமித்து வைத்திருக்கும் 'சார்ஜிங் ஹாகிங்' போக்கைக் கட்டுப்படுத்த சார்ஜிங் நிறுவனங்கள் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சார்ஜ் முடிந்து குறிப்பிட்ட சலுகை நேரத்திற்குப் பிறகும் வாகனத்தை எடுக்காவிட்டால், நிமிடத்திற்கு இவ்வளவு என 'ஐடில் கட்டணம்' வசூலிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் சார்ஜ்ஃபாக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனைச் செயல்படுத்தி வருகின்றன. டெஸ்லா நிறுவனம் ஒரு படி மேலே சென்று, நெரிசல் மிகுந்த சூப்பர்சார்ஜர் மையங்களில் பேட்டரி 80 சதவீதத்தைத் தாண்டினாலே நெரிசல் கட்டணத்தை விதிக்கிறது.

அபராதங்களைத் தாண்டி, மாற்றுப் பார்க்கிங் வசதி வழங்குவது மற்றும் சமூகப் பொறுப்பை நினைவூட்டும் குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளும் ஓட்டுநர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மின்சார வாகனங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பகிர்ந்து பயன்படுத்தும் பண்பையும் ஒவ்வொரு ஓட்டுநரும் வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

SCROLL FOR NEXT