பிரான்சில் நிலவிவரும் கடுமையான வெப்பஅலையால் ஜூனின் (22-28) கடைசி வாரத்தில் மட்டும் 2,025 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் தெரிவித்துள்ளார். இது இறப்பு சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் பிராந்தியத்தில் மட்டும் உயிரிழப்புகள் ஒரே வாரத்தில் 62% உயர்ந்துள்ளன.
ஐரோப்பாவின் பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் மொத்தமாக 3700 இறப்புகள் ஜூனின் கடைசி வாரத்தில் மட்டும் பதிவாகி உள்ளன. பெல்ஜியத்தில், ஜூன் 18 முதல் ஜூன் 29 வரை சுமார் 1,222 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 530 பேர் 85 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
நெதர்லாந்தில் 480க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
ஜூன் 20 முதல் 28 வரை நீடித்த இந்த வெப்பஅலை ஐரோப்பாவில் இதுவரை பதிவானதிலேயே மிக மோசமானது என்றும், இது மின் உற்பத்தியில் இடையூறுகளை ஏற்படுத்தி, உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தி, சுகாதார அமைப்புகளை நிலைகுலையச் செய்தது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த அதீத வெப்பம் பெரும்பாலும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கோடைக்காலத்தில் உச்சக்கட்டமாக 45° C-ல் எல்லாம் வெயில், அடித்துள்ள நிலையில் அங்கு 40° C வெப்பத்திற்கே மக்கள் உயிரிழந்து வருகின்றன. காரணம் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் நீண்டதாக இருக்கும். எனவே, வீடுகள் வெப்பத்தை வெளியேற்றாமல் உள்ளேயே தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதி மக்கள் இந்தளவு கடுமையான வெப்பத்திற்கு பழக்கப்படவில்லை. இதனால் அங்கு வெயில் அதிகமாகும்போது அவர்களது உடல் அதனை தாங்கும் திறன் இல்லாமல், எளிதில் சோர்வடைந்து, பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.