உலகம்

நெருப்புடன் விளையாடாதீர்கள் : டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கடந்த கால தாக்குதலில், ஈரான் நாட்டின் அணு ஆயுத திறன்கள் அழிக்கப்பட்டன.

அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லையென்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஈரான் மீது கடந்த காலங்களில் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா நடத்தியது.

இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் நாட்டின் அணு ஆயுத திறன்கள் அழிக்கப்பட்டன.

மேலும் ராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மற்ற வகையிலும் அவர்களை தோற்கடித்தோம்” என்று கூறினார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற ராணுவ தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்காவுடனான ஒரு சுமூகமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர தவறினால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற ‘லிட்டில் எபிக் ஃபியூரி’ என்ற ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த சூழ்நிலையிலும் அமெரிக்க போர் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ஆயுதப் படை தலைவர் அலி அப்தொல்லாஹி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலி அப்தொல்லாஹி கூறுகையில், “அமெரிக்காவின் போர் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் நுழைவதை காண அதிபர் டிரம்ப் தனது கல்லறையில் கனவு தான் காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஈரான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் தாக்கப்பட்டால், கடலடி கேபிள்கள் முதல் ராணுவ தளங்கள் வரையிலான சிவப்பு கோடுகள் இனி இருக்காது.

அமெரிக்கா நெருப்புடன் விளையாடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT