கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய ராணுவ முகாமில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காற்று வீசி வருவதால் தீ வேகமாகப் பரவி, நிலைமை மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்மண்டன் நகருக்கு தென்கிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெயின்ரைட் என்ற பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படை முகாமில் இந்த "மிகவும் தீவிரமான விபத்து" ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தீ விபத்தில் "கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும்" ஏற்பட்டுள்ளதாக அந்த பிராந்தியத்தின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேன் லாய்ட் தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், வெயின்ரைட் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இதையடுத்து, எட்மண்டன் நகரில் உள்ள ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் வாரன் திர்ஸ்க் அளித்த தகவலின்படி, அங்கு 'கோட் ஆரஞ்சு' (அதிகப்படியான நோயாளிகளை எதிர்கொள்வதற்கான நெறிமுறை) அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக எட்மண்டன் நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் எழுந்துள்ளன. தீ மிக வேகமாகப் பரவி வருவதால், அப்பகுதியில் நடந்து வந்த 'ஆல்பர்ட்டா பொதுவாக்கெடுப்பு' உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கிருந்த வாக்குப்பதிவு மையம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களில் விபத்து நடந்த இடத்திலிருந்து ராட்சத அளவில் கரும்புகை வானை நோக்கி எழுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து கனடா நாட்டின் முக்கியத் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்:
பிரதமர் மார்க் கார்னி : "ஆல்பர்ட்டாவில் உள்ள சி.எஃப்.பி வெயின்ரைட் ராணுவ முகாமில் ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்திய தீவிரமான சம்பவம் நடந்துள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்கின்டி: "இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்ள ஆழமான வருத்தமடைகிறேன். இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்கள் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் : "இந்த தீ விபத்து மிகவும் துயரமானது. ராணுவப் பணியாளர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ்ரே, தான் பிரதமரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் பேசியதாகவும், மீட்புப் பணிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அனைவரும் அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீட்புக் குழுவினருக்கு வழிவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ விபரங்களை வெளியிடவில்லை.