பீரங்கி  
உலகம்

VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி

வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.

வங்கதேசத்தில் பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்துச் சிதறியதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வங்கதேச ராணுவ வீரர்கள் பீரங்கிக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது.

வங்கதேசத்தின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் பீரங்கிக்குள் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

படுகாயமடைந்த அதிகாரி உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணுவத்தின் விளக்கம்

விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறா, துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஏற்பட்ட பிழையா அல்லது வெடிமருந்து கோளாறா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

சீன பீரங்கி

விபத்துக்குள்ளான Type 59 டேங்க், சீனாவினால் வடிவமைக்கப்பட்ட பழமையான முதன்மைப் போர் பீரங்கியாகும். வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.

இதில் பெரும்பாலான பீரங்கிகள் சீனாவின் உதவியுடன் 'Type 59G Durjoy' என்ற புதிய தரத்திற்கு மேம்படுத்தப்பட்டடு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

துப்பாக்கித் திறன் மற்றும் கவசப் பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்ட போதிலும், இதன் அடிப்படை கட்டமைப்பு பழமையான தொழில்நுட்பத்தை சார்ந்ததே என்பதால், பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT