பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா நேற்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இதற்கு பல நாடுகளும் கவலை தெரிவித்து வருகின்றன.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கடற்பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. அங்கிருந்து தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள இலக்கை ஏவுகணை அடைந்தது. சீனா இதுகுறித்த அதிகார்ப்ப்பூர்வ புகைப்படமோ ஏவுகணையின் மாதிரி வடிவங்களையோ இன்னும் வெளியிடவில்லை. ராணுவ வல்லுநர்கள் கூறுகையில், இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கக்கூடும். இந்த வகை ஏவுகணைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை எனக் கருதப்படுகின்றன. மேலும் இவை JL-3 வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் என்றும் கணித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன. குறுகிய முன்னறிவிப்புடன் இத்தகைய மூலோபாய ஏவுகணைச் சோதனைகளை நடத்துவது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அந்நாடுகள் எச்சரித்தன.
சீனா நடத்திய இந்த சோதனை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,
ஆயுதமற்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சீனா சோதனை முறையில் ஏவியதை அமெரிக்கா கண்காணித்தது. அது தெற்கு பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. மேலும் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா முன்பை விடக் கடுமையாக உழைத்து வரும் வேளையில், சீனா அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது.
பீஜிங்கின் வேகமான மற்றும் வெளிப்படையற்ற அணு ஆயுதக் குவிப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பெரும் கவலையை அளிக்கிறது.
அர்த்தமுள்ள ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும், மற்ற அனைத்து P5 உறுப்பு நாடுகளும் செய்துள்ள உறுதிமொழிகளுக்கு இணங்க, அனைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ஏவுதல்களுக்கும் ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஏற்பாட்டிற்கு உறுதியளிக்குமாறும் நாங்கள் சீனாவைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழிகளில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
சீன கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணையில் உண்மையான அணு ஆயுதம் அல்லாமல், போலி போர்க்குண்டு பயன்படுத்தப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதிதான் என்றும், எந்த நாட்டையும் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.
இந்தச் சோதனை சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு இணங்க நடத்தப்பட்டது என்றும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்றும் சீனா தெரிவித்தது.