தனது அணு ஆயுதத் தடுப்புத் திறனை மேம்படுத்தவும், நாட்டின் போர் தயார்நிலையை வலுப்படுத்தவும் புதிய பல பில்லியன் பவுண்ட் ஒப்பந்தத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.
பிரிட்டன் நிறுவனமான பாப்காக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 8 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான இந்த கேட்வே ஒப்பந்தம், ராயல் நேவி நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பு மற்றும் முக்கிய கடற்படைத் தளச் சேவைகள் வழங்கப்படும் விதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடைகளைக் களைந்து செயல்பாடுகளை நவீனமயமாக்குவதோடு, மேற்பரப்புக் கடற்படை வசதிகள், கடல் பயிற்சிகள் மற்றும் எதிர்காலத் தன்னியக்கத் திறன்களுக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
பிளைமவுத், கிளைட் மற்றும் பிரிஸ்டல் ஆகிய பகுதிகளில் சுமார் 3,000 உயர் திறன் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளும், கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத இளைஞர்களுக்காகச் சுமார் 2,500 பழகுநர் மற்றும் பட்டதாரி பணியிடங்களும் உருவாக்கப்படும். ஐந்து ஆண்டுகள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சுமார் 1 பில்லியன் பவுண்ட் உட்பட, பரந்த பிரிட்டன் விநியோகச் சங்கிலியில் சுமார் 2.4 பில்லியன் பவுண்ட் செலவிடப்பட உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என்றும், இந்த முதலீடு தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய முதலீடு என்றும் பிரிட்டன் பிரதமர் ஆண்ட்ரூ பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் திறன் முதலீட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தாமதங்களை இனி அனுமதிக்க மாட்டோம் என்றும், மற்ற துறைகளிலிருந்து நிதியை மாற்ற வேண்டியிருந்தாலும் அணு ஆயுதத் தடுப்புத் திறனுக்கும் பிரிட்டனின் போர் தயார் நிலைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தியுள்ளார்.
17-ஆம் நூற்றாண்டு காலப் பழமையான மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய கடற்படைத் தளமான எச்.எம்.என்.பி டெவோன்போர்ட்டில் இந்த விவரங்களைப் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டார். பனிப்போர் முடிவுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய கடற்படைக் கட்டமைப்பு முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், பாதுகாப்பு அணு ஆயுத நிறுவனத்தால் இயக்கப்படும் அணு ஆயுதத் தடுப்புத் திறனுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.