தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற துப்பாக்கி விற்பனைப் பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளூர் வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அரசு எடுத்து வரும் இந்த முடிவுகள், உண்மையான குற்றங்களைத் தடுக்காமல் சட்டப்பூர்வ வணிகங்களை மட்டுமே கடுமையாகப் பாதிப்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு பாங்காக் வணிக வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தில் வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதற்கு அரசு முற்றுப்புள்ளி வைத்தது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த பள்ளித் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவாக, புதிய துப்பாக்கி வாங்குவதற்கான அனுமதிகளை வழங்குவதையும் உரிமங்களைப் புதுப்பிப்பதையும் இடைநிறுத்த பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பல கடைகளில் விற்பனைக்குத் துப்பாக்கிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. சில கடை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் துப்பாக்கிக் கடைகளை ரொட்டிப் பாக்கரி போன்ற வேறு தொழில்களாக மாற்றி நடத்தி வரும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுகள் குறித்துப் பேசிய தாய்லாந்து துப்பாக்கி வணிகர்கள் சங்கத்தின் தலைவர், சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வாங்குவதைக் கட்டுப்படுத்துவது குற்றங்களைக் குறைக்காது என்று தெரிவித்துள்ளார். சட்டப்பூர்வ வழிகள் அடைக்கப்படும் போது, மக்கள் சட்டவிரோத கறுப்புச் சந்தையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என்றும், இதனால் குற்றங்கள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. தோராயமாக 1 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ள நிலையில், அதில் 40 லட்சத்திற்கும் அதிகமானவை எந்தவிதப் பதிவும் இல்லாத சட்டவிரோதத் துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.