இஸ்லாமியர்களின் புனித தளமான மக்கா மற்றும் மதினாவை நோக்கி ஹவுதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்த நிலையில், அந்த குற்றச்சாட்டிற்கு ஹவுதி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா ஆகிய தளங்கள் இஸ்லாமியர்களின் புனித தளங்களாக பார்க்கப்படுகிறது.
மக்காவில் அமைந்துள்ள கஃபா தளமானது ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரையின் மைய புள்ளியாக விளங்குகிறது.
மதீனாவில் நபிகள் நாயகம் மசூதி அமைந்துள்ளது, இந்த புனித தளத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த இரண்டு தளங்களையும் குறிவைத்து கடந்த வாரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக சவுதி அரேபியா தெரிவித்தது.
மேலும் இந்த ஏவுகணைகளை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும், மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதினா அல்-முனவ்வரா ஆகிய தளங்களில் ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்ததாகவும் சவுதி குடிமை பாதுகாப்பு பொது இயக்குநரகம் தெரிவித்தது.
இந்த நிலையில் சவுதி வைத்த குற்றச்சாட்டிற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சவுதியை குறிவைத்து தங்கள் குழு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ கூறுகையில், “சவுதி அரேபியாவில் உள்ள பகுதிகளை இலக்காக கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
மதீனா வான்வெளியில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி அரேபியா கூறுவது, அவர்களின் பிரம்மாண்டமான மற்றும் கொடூரமான புனைவுகளின் தொடர்ச்சி மட்டுமே” என தெரிவித்துள்ளார்.