ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் கூறுகையில், “நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வர விரும்பினால், தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விரும்பினால், நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் உங்களிடம் உரிய விசா இல்லையென்றால், நீங்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த புதிய விசா நடவடிக்கையின் கீழ், சர்வதேச குடியேறிகளின் விசாக்களில் ‘மேலும் தங்க கூடாது’ என்ற விதிமுறை இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் கூட்டாளர் விசா போன்ற மற்றொரு விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்குவது தடுக்கப்படும்.
மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர் விசாக்களில் இரண்டாம் நிலை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சர்வதேச மாணவர்களின் மனைவிகளும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் படிக்கும் பாடத்தைப் பொறுத்து, அவர்களுக்கு அனுமதிக்கப்படும் கால நேரம் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.